இடமாற்ற கோரிக்கைகளுக்கு மந்திரிகள், எம்.பி.க்கள் மூலம் அணுகினால் நடவடிக்கை அதிகாரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
உதவி செக்ஷன் அதிகாரிகள் பலர், தனிப்பட்ட மற்றும் மருத்துவ காரணங்களுக்காக பணியிட மாற்றம் கோருகிறார்கள்.;
புதுடெல்லி,
மத்திய செயலக பணிப்பிரிவை சேர்ந்த அரசிதழ் பதிவு பெறாத குரூப் பி அதிகாரிகளான உதவி செக்ஷன் அதிகாரிகளுக்கு மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உதவி செக்ஷன் அதிகாரிகள் பலர், தனிப்பட்ட மற்றும் மருத்துவ காரணங்களுக்காக பணியிட மாற்றம் கோருகிறார்கள். ஆனால் இந்த கோரிக்கைகள், மந்திரிகள் மற்றும் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மூலமாக பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இதை நாங்கள் கடுமையாக அணுகுவோம். விதிமுறைப்படி, இப்படி அணுகும் உதவி செக்ஷன் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தங்கள் பணி தொடர்பான விவகாரங்களில் தங்கள் நலனுக்காக மேலதிகாரிகளிடம் அரசியல் செல்வாக்கோ, வெளிப்புற செல்வாக்கோ செலுத்தக்கூடாது என்று அரசு பணியாளர் நடத்தை விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த விதிமுறைகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.