மராட்டியத்தில் கூடுதலாக 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு; இந்தியாவில் 12 ஆக உயர்வு

மராட்டியத்தில் கூடுதலாக 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இந்தியாவில் மொத்த பாதிப்பு 12 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2021-12-05 14:01 GMT

புனே,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த சூழலில், உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான், தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த 24-ந் தேதி கண்டறியப்பட்டது.  இந்த வைரஸ் 10 நாட்களில் 38க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்து உலகை அதிர வைத்து வருகிறது.

ஒமைக்ரான் வைரஸ் தோன்றியுள்ள தகவல் வெளியானதும் இந்தியா உஷாரானது. இந்த தொற்றை தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகள் வந்திறங்குவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனினும்,  இந்தியாவையும் ஒமைக்ரான் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் இன்று 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இந்தியாவில் கர்நாடகாவில் இருவருக்கும், குஜாரத், மராட்டியத்தில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட நபர் தான்சானியாவில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளார். 

இந்தியாவில் ஒமைக்ரான்  பரவலால் கொரோனாவின் அடுத்த அலை ஏற்படுமா? என்பது குறித்து தெளிவாக தெரியவர இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.  இது குறித்து மராட்டிய அரசின் கூடுதல் தலைமை செயலாளர் (சுகாதாரம்) மருத்துவர் பிரதீப் வியாஸ் கூறுகையில், கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் விரைவாக செலுத்தி முடிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.  மாஸ்க் அணிவது உள்பட  பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதையும் உறுதி செய்தல் வேண்டும் என்றார்.

மராட்டிய அரசின் கொரோனா தடுப்பு பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர் ஷஷாங்க் ஜோஷி கூறும் போது, ஒமைக்ரான் வைரஸ் தற்போதைக்கு புரியாத புதிராக உள்ளது. நாம் அச்சம் அடைய வேண்டியது இல்லை. விழிப்புடன் இருக்க வேண்டும். டெல்டா வகையை மீறி ஒமைக்ரான் பரவுகிறதா? என்பதை அடுத்த சில வாரங்களில்  நாம் ஆய்வு செய்ய வேண்டும். இந்தியாவில் ஒமைக்ரான் எவ்வாறு செயல்படுகிறது என கண்டறிய  அடுத்த 6 முதல் 8 வாரங்கள் மிக முக்கியமானவை என்றார்.

இந்த நிலையில், மராட்டியத்தில் கூடுதலாக 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனால், மராட்டியத்தில் மொத்தம் 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்