‘ஜாவத்’ புயல் வலு இழந்தது - இந்திய வானிலை ஆய்வு மையம்
‘ஜாவத்’ புயல் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு இழந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா,
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
வங்க கடலில் உருவான ‘ஜாவத்’ புயல், நேற்று மாலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு இழந்து, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் மேற்கு-மத்திய வங்க கடலில் நிலைகொண்டிருந்தது. ஒடிசாவின் பூரியில் இருந்து தெற்கு-தென்மேற்கே 330 கி.மீ. தொலைவில் அது இருந்தது.
இன்று காலை வடக்கு-வடகிழக்குப்புறமாக காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து, மேலும் பலவீனம் அடையக்கூடும். இன்று நண்பகல்வாக்கில் அது பூரி கடற்கரையை அடையும். தொடர்ந்து அது ஒடிசா கடற்கரை வழியாக வடக்கு-வடகிழக்குப்புறமாக நகர்ந்து மேற்கு வங்காள கடற்கரையை அடையும். அப்போது அது மேலும் வலு இழந்திருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கு வங்காளத்தின் கங்கை நதியை ஒட்டிய பகுதிகள், வடக்கு ஒடிசாவில் இன்று கன முதல் மிக கனமழையும், அசாம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். மத்திய, வடக்கு வங்க கடல் பகுதியில் இன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் அபாயம் காரணமாக மேற்கு வங்காள மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாக்கள், புர்பா மெதினிபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பேரிடர் மீட்பு படையினரும் தயார்நிலையில் உள்ளனர்.