கேரளாவில் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் சம்பளம் இல்லை
கேரளாவில் கொரோனா தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது என்று கேரள கல்வித் துறை மந்திரி சிவன் குட்டி தெரிவித்தார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது என்று கேரள கல்வித் துறை மந்திரி சிவன் குட்டி தெரிவித்தார்.
கேரளாவில் பல்வேறு காரணங்களை சுட்டி காட்டி சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்து வந்தனர். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே வழி என்ற நிலையில் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவித்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் 47 லட்சம் மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என்ற நிலையில், தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டது.
மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஆசிரியர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழை வாரத்திற்கு ஒருமுறை தலைமை ஆசிரியரிடம் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆணையும் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது தடுப்பூசி போடாத ஆசிரியர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக குறைந்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று கேரள கல்வித்துறை மந்திரி வி. சிவன் குட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்னும் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் விடுப்பு எடுக்கும் ஒவ்வொரு நாட்களுக்கும் சம்பளம் குறைக்கப்படும்" என்று கூறியுள்ளார்.