குளிர்கால கூட்டத்தொடர்: கொரோனா நிலவரம் குறித்து மக்களவையில் இன்று விவாதம்..!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 4-ம் நாளான இன்று கொரோனா நிலவரம் உள்ளிட்டவை குறித்து மக்களவையில் விவாதம் நடைபெற உள்ளது.

Update: 2021-12-02 02:56 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை நேற்று காலை கூடியவுடன், கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து, சபை நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த மங்கோலிய நாடாளுமன்ற பிரதிநிதிகளை சபாநாயகர் ஓம் பிர்லா வரவேற்றார்.

கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தபோது, தெலுங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர்கள், விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக, பதாகைகளுடன் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷங்கள் எழுப்ப தொடங்கினர். கேள்வி நேரத்தின்போது இப்படி நடந்து கொள்வது முறையல்ல என்று ஓம் பிர்லா எச்சரித்தார்.

சில கேள்விகள் மட்டுமே எழுப்பப்பட்ட நிலையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர்கள் அமளி தொடர்ந்ததால், சபையை பகல் 12 மணிவரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

இதேபோல் மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியவுடன், மாநிலங்களவை எம்.பி.க்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியை தொடங்கினர். சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷங்கள் எழுப்பினர். இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரும் பதாகைகளை கையில் பிடித்திருந்தனர். அவர்களின் செயலுக்கு சபைத்தலைவர் வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்தார். 

இருப்பினும், எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், சபை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், சபை கூடியபோது, கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், எம்.பி.க்கள் இடைநீக்கத்தை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பேச அனுமதிக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினர்.

கேள்வி நேரத்தில் வேறு பிரச்சினைகளை எழுப்ப அனுமதிக்க முடியாது என்று சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் கூறினார். அதை எதிர்த்து ஆவேசமாக குரல் எழுப்பினர். இதனால், சபை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

2 மணிக்கு சபை கூடியபோது, மல்லிகார்ஜுன கார்கேவை பேச அனுமதிக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் வலியுறுத்தினர். ஆனால், சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் அனுமதிக்கவில்லை. அணை பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்யுமாறு மத்திய ஜல்சக்தி மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை ஹரிவன்ஷ் சிங் கேட்டுக்கொண்டார். ஷெகாவத், மசோதாவை தாக்கல் செய்து பேச தொடங்கினார். 

ஆனால் அவரை பேச விடாமல் அமளி தொடர்ந்தது. இதனால், சபை பிற்பகல் 3 மணிவரை தள்ளி வைக்கப்பட்டது. 3 மணிக்கு சபை கூடியபோது, சபைத்தலைவர் இருக்கையில் புவனேஸ்வர் கலிடா இருந்தார். அப்போதும், மல்லிகார்ஜுன கார்கேவை பேச அனுமதிக்கக்கோரி, கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் தொடர்ந்து பேச புவனேஸ்வர் கலிடா அனுமதி அளித்தார். அதை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். கூச்சல், குழப்பம் நீடித்ததால், சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 4-ம் நாள் இன்று நடைபெற உள்ளது. கொரோனா நிலவரம் உள்ளிட்டவை குறித்து மக்களவையில் இன்று விவாதம் நடைபெறும். மேலும் மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கலாகிறது. அணைகள் பாதுகாப்பு மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் செய்திகள்