‘ஒமைக்ரானுக்கு எதிரான எளிதான தடை, பூஸ்டர் தடுப்பூசிதான்’ - பிரபல நிபுணர் தகவல்
ஒமைக்ரானுக்கு எதிரான எளிதான தடை, பூஸ்டர் தடுப்பூசிதான் என்று பிரபல நிபுணர் ஜேக்கப் ஜான் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஒமைக்ரான் வைரசுக்கு எதிரான எளிதான தடை பூஸ்டர் டோஸ் தடுப்பூசிதான், இந்தியாவில் இதை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பிரபல நச்சுயிரியல் நிபுணர் ஜேக்கப் ஜான் கூறி உள்ளார்.
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளில் பரவி வருவது, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் துணை அமைப்பான நுண்ணுயிரியல் மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனரும், நச்சுயிரியல் நிபுணருமான டாக்டர் டி.ஜேக்கப் ஜான், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
இந்தியாவில் சிறந்ததை எதிர்பார்க்கலாம். ஆனால் மோசமானதை சந்திக்க தயாராக வேண்டும். நாட்டில் 30 சதவீதத்தினர்தான் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர். கோப்பையில் மூன்றில் ஒரு பங்குதான் நிரம்பி உள்ளது.
இப்போது உரு மாறிய கொரோனா வைரஸ் நுழைந்து, வேகமாக பரவினால் அது கணிக்க முடியாத ஒன்று. ஆனால் இது மக்கள் பயப்படுவதுபோல மோசமாக இருக்காது. இது மூன்றாவது அலையை உருவாக்காமல் போகலாம்.
ஆனால், புத்திசாலித்தனமாக நமது மக்கள் தொகை நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்க வேண்டும். இதைத்தான் மந்தை எதிர்ப்புச்சக்தி என்கிறோம். 2 விஷயங்களை கவனிக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்களுக்கு அதைப் போட வேண்டும். 2 டோஸ் போட்டுக்கொண்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டும்.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசிதான் புதிய உருமாறி வைரசுக்கு எதிரான எளிய தடை ஆகும். இதை உடனடியாக தொடங்கி விட வேண்டும்.
இதேபோன்று முதல் டோஸ் போட்டு இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்களுக்கு அதை உடனே போட வேண்டும். கர்ப்பிணிகளும் முதல் கர்ப்பத்தின்போது 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். முடிந்த அளவு விரைவாக செய்ய வேண்டும். அடுத்த கர்ப்பத்தின்போது பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசியை முழுமையாக போடுகிறவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படத்தான் செய்கிறது. அந்த வகையில் இந்த வைரசும் பாதிக்கலாம். அடிப்படை வைரஸ் ஒன்றுதான். உயர்ந்த அளவிலான நோய் எதிர்ப்புச்சக்தியை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மூலம் எதிர்பார்க்க முடியும். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியானது நோய்த்தொற்றுக்கு எதிராகவும், பரவும் தன்மைக்கு எதிராகவும் அதிக பாதுகாப்பானது.
ஒமைக்ரானைப் பொறுத்தமட்டில் 34 உரு மாற்றங்கள் கவனிக்கப்பட்டுள்ளன. இது ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் பிற உருமாறிய வைரஸ்களைவிட அதிக அளவிலானது.
அசல் கொரோனா வைரசின் பரவும் அடிப்படை நிலை 1 என்று வைத்துக்கொண்டால், டெல்டா 2 முதல் 3 மடங்கு அதிகமாகவும், ஒமைக்ரான் இன்னும் அதிகமாகவும் இருக்கும். 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்பது சுவிட்சர்லாந்து விஞ்ஞானி ஒருவரின் கருத்து ஆகும்.
டெல்டா வைரசை ஒமைக்ரான் வைரசுடன் ஒப்பிடுகையில், ஒமைக்ரான் மிகவும் திறமையாக பரவக்கூடியது. 2 தடுப்பூசிகளால் கிடைத்த நோய் எதிர்ப்புச்சக்தியை எதிர்க்கும்” என்று அவர் கூறினார்.