நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.31 லட்சம் கோடி - 2வது மிகப்பெரிய வசூல்
கடந்த அக்டோபர் மாத சரக்கு மற்றும் சேவை வரி வசூலை விட இந்த நவமபர் மாத சரக்கு மற்றும் சேவை வரி அதிகரித்து உள்ளது.
புதுடெல்லி,
நவம்பர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி ரூ.1.31 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரி கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபின், இந்த ஆண்டு நவம்பரில் வசூலாகிய ரூ.1.31 லட்சம் கோடிதான் 2-வது அதிகபட்ச வசூலாகும்.
கடந்த ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக ரூ.1.41 லட்சம் கோடி வசூலாகியது. கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.1.30 லட்சம் கோடி வசூலாகிய நிலையில் அதைவிட கடந்த மாதம் கூடுதலாக வசூலாகியுள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது;-
நவம்பர் மாதம் வசூலான சரக்கு மற்றும் சேவை வரியில் ரூ.1,31,526 கோடியில்,
மத்திய சரக்கு மற்றும் சேவை வரி - 23,978 கோடி,
மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ.31,127 கோடி,
ஐஜிஎஸ்டி-ரூ.66,815 கோடி( இறக்குமதி பொருள் மூலம் கிடைத்த வரி ரூ.32,165 கோடியும் அடக்கம்)
செஸ்- ரூ.9,606 கோடி( பொருள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.653 கோடியும் அடக்கம்)
மேலும் ரூ.1.31 லட்சம் கோடி வசூலானது கடந்த 2020 நவம்பர் மாத வசூலான தொகையை காட்டிலும் 20 சதவீதமும், 2019 நவம்பர் மாதம் வசூலான தொகையை காட்டிலும் 27 சதவீதமும் அதிகம் ஆகும். அக்டோபரில் ரூ.1.30 லட்சம் கோடி வசூலான நிலையில், இந்த மாதம் வசூல் அதிகரித்தது, பொருளாதாரம் மீண்டு வருவதை காட்டுகிறது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.