மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: புதுச்சேரி கவர்னர்
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் வலியுறுத்தியுள்ளார்.;
உலக மக்கள் தொகை தினம்
மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 11-ந் தேதி உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஏற்பாடு செய்த மக்கள் தொகை தின விழா-2021 லாஸ்பேட்டையில் உள்ள குறிஞ்சி நகர் மனமகிழ் மன்றத்தில்
நடந்தது.
நிகழ்ச்சிக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
விழிப்புணர்வு
நமது நாட்டில் மக்கள் தொகை 130 கோடிக்கு மேல் இருக்கிறது. மக்கள் தொகை அதிகமாக இருந்தால் மனித வளமும் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் வளங்கள் அனைத்தையும் பகிர்ந்து அளிக்க வேண்டும். நாட்டை வளப்படுத்த வேண்டும் என்றால் மக்கள் அனைவரும் பசியின்றி முன்னேற்றத்துடன் வாழ வேண்டும். அதற்கு மக்கள் தொகையை கட்டுப் படுத்த வேண்டும். மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் ஆண்-பெண் இருவருக்கும் பங்கு உள்ளது. குடும்ப கட்டுப்பாடு என்பதை விட குடும்ப
திட்டமிடுதல் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். குடும்பத்தை திட்டமிட்டு உருவாக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டியது அவசியம்.
ஆரோக்கியமான குழந்தைகளே நாட்டின் செல்வங்கள். இன்றைய விஞ்ஞான உலகில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த எளிய முறைகள் இருக்கின்றன. இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாநில சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் ஸ்ரீ. ராமலு, துணை இயக்குனர் (குடும்ப நலம்) அனந்த லட்சுமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.