டூல் கிட் விவகாரம்: டுவிட்டர் அலுவலகங்களில் டெல்லி போலீசார் அதிரடி சோதனை

டுவிட்டர் அலுவலகங்களில் டெல்லி போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update:2021-05-24 21:29 IST
புதுடெல்லி,

போராட்டங்கள் நடத்தும் போது, அந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை விளக்க பயன்படுத்தும் ஒருவகை செயல்திட்ட்டமே ‘டூல் கிட்’. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் போராட்ட செயல்திட்ட ஆவணம் ஆகும்.

பொதுவாக எந்த ஒரு போராட்டத்தின் போதும் டூல் கிட் மூலம் போராட்டம் செயல்திட்டம் சமூகவலைதளத்தில் பரப்பப்பட்டு வருகிறது. மேலும், இந்த டூல் கிட் மூலம் குறிப்பிட்ட கட்சி, தனிநபர்களை குறிவைத்து டுவிட்டரில் டிரெண்ட் செய்யும் நடைமுறைகளும் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், பாஜக செய்தித்தொடர்பாளர்களில் ஒருவரான சம்பித் பாத்ரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், கொரோனாவை கையாள்வதில் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டதாக தெரிவிக்கும் வகையிலும், பாஜக அரசை விமர்சிக்கும் வகையிலும் டூல் கிட் மூலம் செயல்திட்ட்டம் ஒன்றை டுவிட்டர் மூலம் காங்கிரஸ் கட்சி பரப்பி வருவதாக தெரிவித்தார். 

மேலும், கொரோனா வைரசை கையாளுவதில் இந்தியாவை வெளிநாட்டு ஊடகங்கள் தொடர்ந்து விமர்சிக்க இந்த டூல் கிட் மூலம் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பாத்ரா பதிவிட்டிருந்த அந்த டுவிட்டர் பதிவை ’(திருத்தி அமைக்கப்பட்ட) கையாளப்பட்ட ஊடகம்’ என்று டுவிட்டர் நிறுவனம் அறிவித்தது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், டூல் கிட் விவகாரம் தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்தில் டெல்லி போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி போலீசின் சிறப்பு பிரிவினர் டெல்லி, குருகிராம், லடோ சாராய் ஆகிய 3 இடங்களில் உள்ள டுவிட்டரின் கிளைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

டூல் கிட் விவகாரம் பூதாகாரமாகி வரும் சூழ்நிலையில் டெல்லியில் உள்ள டுவிட்டர் நிறுவனத்தில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்