கர்நாடகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் - துணை முதல்-மந்திரி தகவல்
கர்நாடகத்தில் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும் என கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கொரோனா சிகிச்சை மையங்களுக்கு தேவையான சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
கடந்த ஏப்ரல் 21-ந் தேதிக்கு பிறகு கர்நாடகத்திற்கு 3 லட்சம் டோஸ் தடுப்பூசியை மத்திய அரசு ஒதுக்கியது. இதில் 70 ஆயிரம் டோஸ் தடுப்பூசி இருப்பு உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் 2.68 லட்சம் டோஸ் தடுப்பூசி கர்நாடகத்திற்கு வரவுள்ளது.
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 91 ஆக உள்ளது. இது மட்டுமின்றி 150 தனியார் ஆய்வகங்களும் செயல்பட்டு வருகின்றன. 24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவு வழங்கப்படுகிறது. பரிசோதனை முடிவு தாமதமாக வழங்கும் ஆய்வகங்களுக்கு ரூ.150 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
கர்நாடகத்தில் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும். கர்நாடகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 70 ஆயிரம் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 50 ஆயிரம் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி உள்ளது. 950 டன் ஆக்சிஜன் கர்நாடகத்திற்கு கிடைக்கிறது. தேவைப்பட்டால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மேலும் 20 ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்படும்.
மத்திய அரசு கர்நாடகத்திற்கு இதுவரை 1 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசியை வழங்கியுள்ளது. பொதுமக்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கை முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.