டெல்லியில் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா தொற்றின் 3வது அலை குறித்து மக்கள் கவலை அடைந்துள்ளனர். கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி அவசியமானது. டெல்லியில் கொரோனா தடுப்பூசிகளுக்கு இப்போதும் தட்டுப்பாடு நிலவுகிறது.
டெல்லியில் 100 பள்ளிகளில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன, மேலும் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதை 300 பள்ளிகளில் விரிவுபடுத்தவும், தடுப்பூசியை ஒரு நாளைக்கு 3 லட்சமாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளோம். காஸியாபாத், நொய்டாவில் இருந்து தடுப்பூசி போட மக்கள் வருகின்றனர்.
டெல்லியில் ஒவ்வொரு மாதத்திற்கும் 80 முதல் 85 லட்சம் தடுப்பூசிகள் இருந்தால், அடுத்த 3 மாதங்களில் முழுவதுமாக தடுப்பூசி செலுத்த முடியும். டெல்லியில் 18-வயதிற்கு மேற்பட்டவர்கள் 1.5 கோடி பேர் உள்ளனர். எனவே 3 கோடி டோஸ் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது வரை டெல்லிக்கு வெறும் 40 லட்சம் டோஸ்கள் மட்டுமே கிடைத்துள்ளன. எங்களுக்கு இன்னும் 2.6 கோடி டோஸ்கள் தேவைப்படுகிறது. போதுமான அளவு தடுப்பூசிகளை விநியோகிக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.