மத்திய அரசு துறைகளின் ஒப்பந்தங்களை ஆய்வு செய்வதற்கான விதிமுறைகள் மறுசீரமைப்பு

மத்திய அரசு துறைகளின் ஒப்பந்தங்களை ஆய்வு செய்வதற்கான விதிமுறைகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மறுசீரமைப்பு செய்துள்ளது.

Update: 2021-05-07 21:34 GMT
புதுடெல்லி,

மத்திய அரசு துறைகள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை மத்திய தொழில்நுட்ப ஆய்வாளர்கள் நிறுவனமான சி.டி.இ.ஓ. ஆய்வு செய்கிறது. இதன்படி நிறுவனங்களுக்குத் தேவையான பொருட்களை கொள்முதல் செய்வது, வெளி நிறுவனங்களின் சேவைகளைப் பெறுவது, திட்டப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்டவை தொடர்பான ஒப்பந்தங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

இந்த ஆய்வில் ஒப்பந்ததாரர் தரப்பில் காணப்படும் குறைபாடுகள் பணிகளின் தரம் உள்ளிட்டவை ஆராயப்பட்டு குறைகளை சீர் செய்யும்படி சி.டி.இ.ஓ. அந்தந்த துறைகளைச் சேர்ந்த ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும். மேலும் ஊழல் நடந்ததற்கான முகாந்திரம் இருக்குமானால், அது குறித்து விசாரணை நடத்துவதற்கான பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சார்பில் மத்திய அரசு துறைகளின் செயலர்கள், பொதுத்துறை வங்கிகள் காப்பீட்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் ஆகியோருக்கு அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“மத்திய அரசு துறைகள், பொதுத்துறை வங்கிகள் நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான சி.டி.இ.ஓ. ஆய்வுக்கான விதிமுறைகள் சீர்திருத்தப்பட்டு விசாரணையை முடிப்பதற்கான காலவரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி அரசு துறைகளின் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான ஆய்வுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் ஒப்புதலை சி.டி.இ.ஓ. பெற வேண்டும். ஒப்புதல் கிடைத்ததும் அந்தந்த துறைகளின் தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த அதிகாரிகள் குறிப்பிட்ட நாளில் ஆய்வுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து சி.டி.இ.ஓ. அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது வழங்க வேண்டும். ஆய்வு முடிவுகளை 15 நாட்களில் சி.டி.இ.ஓ. தயாரிக்க வேண்டும். 

ஊழல் ஒப்பந்ததாரரிடம் வசூலிக்க வேண்டிய தொகை உள்ளிட்ட புகார்கள் இருந்தால் அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும். ஆய்வு விசாரணை இறுதி முடிவு ஆகியவற்றை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும். இந்த விதிகளை கண்டிப்பாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்