தடுப்பூசி கேட்டு மிரட்டல் வருவதால் சீரம் நிறுவன தலைவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்; மும்பை ஐகோர்ட்டில் வழக்கு

தடுப்பூசி கேட்டு மிரட்டல் விடுக்கப்படுவதால் சீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனாவாலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.;

Update: 2021-05-07 03:21 GMT

மிரட்டல்

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து வரும் கோவிஷீல்டு தடுப்பூசியை கேட்டு அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலாவுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் தரப்பில் இருந்து அழுத்தங்கள் வந்ததாக கூறப்பட்டது.

இந்தநிலையில் குடும்பத்துடன் ஆதார் பூனாவாலா லண்டன் சென்று விட்டார். அங்கு அவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவில் தடுப்பூசி கேட்டு தனக்கு மிரட்டல் வருவதாக குறிப்பிட்டார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மிரட்டல் தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்தால், விசாரணை நடத்தப்படும் என்று மராட்டிய அரசு அறிவித்து இருந்தது.

வழக்கு

இந்தநிலையில் மும்பை ஐகோர்ட்டில், தத்தா மானே என்ற வக்கீல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், "தடுப்பூசி கேட்டு ஆதார் பூனாவாலாவுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும். அவர் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து இந்தியாவை விட்டு வெளியேறி விட்டார். தடுப்பூசி தயாரிப்பாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதினால், அது தடுப்பு மருந்து தயாரிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதோடு, ஆதார் பூனாவாலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார் பூனாவாலாவுக்கு ஏற்கனவே ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்