மேற்கு வங்காள தேர்தல் வன்முறை குறித்து கவர்னரிடம் உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டதால் பரபரப்பு; உண்மையை கண்டறிய 4 பேர் குழு நியமனம்
மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து கவர்னரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
உண்மையை கண்டறிய 4 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
மம்தா மறுப்புமேற்கு வங்காள சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை கடந்த 2-ந் தேதி நடந்தது. அதில், திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, மாநிலத்தின் பல இடங்களில் வன்முறை வெடித்தது. பா.ஜனதாவினரை குறிவைத்து திரிணாமுல் காங்கிரசாா் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில், 14 பா.ஜனதாவினர் கொல்லப்பட்டதாகவும், ஒரு லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி விட்டதாகவும் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டை மம்தா பானர்ஜி மறுத்தார். பா.ஜனதா வெற்றி பெற்ற இடங்களில்தான் வன்முறையும், மோதலும் நடப்பதாக அவர் கூறினார்.
அரசு மவுனம்இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கை அனுப்பி வைக்குமாறு மேற்கு வங்காள மாநில அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. ஆனால், மாநில அரசு அறிக்கை அனுப்பி வைக்கவில்லை. அதையடுத்து, நேற்று முன்தினம் உள்துறை அமைச்சகம் நினைவூட்டல் கடிதம் அனுப்பியது. இனியும் காலதாமதம் செய்யாமல், வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், இதை கடுமையாக அணுகுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தது. அதன்பிறகும் மாநில அரசு அறிக்கை அனுப்பவில்லை.
கவர்னரிடம் அறிக்கைஇதையடுத்து, மேற்கு வங்காள சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து அறிக்கை அனுப்பி வைக்குமாறு மாநில கவர்னர் ஜெகதீப் தாங்கரை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. மம்தா தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்று ஒருநாளே ஆன நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கவர்னரிடம் அறிக்கை கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உண்மை கண்டறியும் குழுமேலும், மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைக்கான காரணங்கள் குறித்து விசாரிக்கவும், களநிலவரத்தை ஆராயவும் 4 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கொல்கத்தாவுக்கு சென்றுள்ளது.