கொரோனா 3-வது அலை பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
கொரோனா 3-வது அலை பாதிப்பை தடுக்க நடவடிக்கை தேவை என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
ஆக்சிஜன் தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் நடைபெறும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.
டெல்லிக்கு நாள்தோறும் 700 டன் ஆக்சிஜன் வினியோகிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 30-ந் தேதி பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு வியாழக்கிழமை காலை 10.30 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
நேற்று நடைபெற்ற விசாரணையின்போது டெல்லி அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் ராகுல் மெஹ்ரா, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று மத்திய அரசு டெல்லிக்கு 700 டன் ஆக்சிஜனுக்குப் பதிலாக 730 டன் வழங்கியுள்ளது.
டெல்லியில் 56 முக்கிய மருத்துவமனைகளில் 4-ம் தேதி ஆய்வு மேற்கொண்டபோது போதுமான ஆக்சிஜன் இருப்பது கண்டறியப்பட்டது. டெல்லிக்கு நாள்தோறும் 700 டன் ஆக்சிஜனை மத்திய அரசு வினியோகித்தால், பிற மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ஆக்சிஜன் தேவை, விரைவில் தீரப்போகிறது என மக்களும், மருத்துவமனைகளும் சமூக ஊடகங்களில் உதவி கேட்டு பதிவிட்டு வருவது பீதியை உருவாக்குகிறது.
டெல்லிக்கு வினியோகிக்கப்படும் 700 டன் ஆக்சிஜனில் 490 டன் மட்டுமே தேவைப்படுகிறது என்றால், மீதமுள்ள ஆக்சிஜனை ஏன் மத்திய அரசு இருப்பு வைக்க கூடாது? என வினவினர்.
இதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நாட்டில் மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை. டெல்லி மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்வதில் டெல்லி அரசுக்கு சில இடைவெளி ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் வினியோகம், தேவை குறித்து தேசிய அளவில் தணிக்கை செய்ய வேண்டும். அப்போதுதான் மாநிலங்களில் உள்ள உண்மையான நிலவரம் தெரியவரும் என்றார்.
இதற்கு நீதிபதிகள், மத்திய அரசின் ஆக்சிஜன் வினியோகம் தொடர்பாக வைத்துள்ள திட்டத்தை சீரமைக்க வேண்டியுள்ளது. வீடுகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் இறக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
அதே சமயம் அனைத்து உயிர் பலிகளும் ஆக்சிஜன் இல்லாததால் ஏற்படுகின்றன என்பதையும் நாங்கள் ஏற்கவில்லை. இருப்பினும் பல உயிர்கள் பலியாகி இருப்பது உண்மை. பெருநகரங்கள், சிறு நகரங்களில் உள்ள கொரோனா சூழலை மட்டும் மத்திய அரசு கருத்தில் கொள்ளாது, கிராமப்புறங்களில் நிலவும் சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
கள்ளச்சந்தையில் ஆக்சிஜன் விற்பனை தடுக்கப்பட்டுள்ளதா, தேவையான மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்யப்படுகிறதா என நீதிபதிகள் கேட்டதற்கு, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சுகாதாரம் மாநில அரசு பட்டியலில் உள்ளது. ஆக்சிஜன் வினியோகம் தொடர்பாக மாநில அரசுகள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், கொரோனா 3-வது அலை பாதிப்பை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கைகளுக்கு நாம் தயாராக வேண்டியுள்ளது. கொரோனா 3-வது அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிப்படைய கூடுமென சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆக்சிஜன் இருப்பையும் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும், டெல்லிக்கு நாள்தோறும் வழங்கப்படும் 700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் அளவை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மத்திய அரசு குறைக்கக் கூடாது. நாடு முழுவதும் உள்ள சூழலை கருத்தில் கொண்டு ஆக்சிஜன் வினியோகம் முறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.