ஆக்சிஜன் தேவைப்படுவோர் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - டெல்லி மாநில அரசு தகவல்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆக்சிஜன் தேவை என்றால் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-05-06 07:10 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

டெல்லியில் கடந்த சில நாள்களாக மருத்துவமனைகளில் உயிர்காக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. கொரோனா 2ஆம் அலை காரணமாக டெல்லியில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. மேலும், டெல்லியில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழக்கும் சபம்வங்களும் தொடர்ந்து நடைபெறுகிறது. 

இதனிடையே டெல்லியிலுள்ள மருத்துவமனைகள், படுக்கைகள், ஐசியுக்கள் உள்ளிட்ட இதர விவரங்கள், நிலவரம் ஆகியவற்றை அறிய பிரத்யேக இணையதளங்கள், செயலிகள் மூலம் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கொரோனா சிகிச்சை தொடா்பான மருத்துவமனைகள் மற்ற உதவிகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் அறியும் வகையில் 'ஒரே உதவி எண்' உருவாக்கி அதை பிரபலப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கவுபா கூறியிருந்தார்.

இந்த சூழலில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லிக்கு நாளொன்றுக்கு வெறும் 490 டன் என்றில்லாமல் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டிருந்ததது. இதனைத்தொடர்ந்து டெல்லிக்கு தேவையான முழு ஆக்சிஜன் கோட்டாவை வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டும், அதைச் செயல்படுத்தத் தவறியதாக மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆக்சிஜன் தேவை என்றால் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படும் அனைத்து நபர்களும் delhi.gov.in என்ற இணையதளத்தில் செல்லுபடியாகும் ஆதார் எண் உள்ளிட்ட அடையாள அட்டை விவரங்கள் மற்றும் கொரோனா சோதனை சான்று உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.




மேலும் செய்திகள்