கொரோனா பாதிப்பு: அஜித் சிங் மறைவு ; பிரதமர் மோடி இரங்கல்

ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் கொரோனா பாதிப்பால் காலமானார்.

Update: 2021-05-06 05:32 GMT
Image courtesy : republicworld.com
புதுடெல்லி:

ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் (வயது 82). அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதையடுத்து, கடந்த மாதம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 20ம் தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. எனினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து அவரது மகனும் முன்னாள் எம்பியுமான ஜெயந்த் சவுத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும், விவசாயிகளின் பிரதிநிதியாக செயல்பட்டவருமான அஜித் சிங். 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர்,மன்மோகன் சிங் அமைச்சரவையில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், வாஜ்பாய் , நரசிம்மராவ் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தவர். முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் மகன் அஜித் சிங் ஆவார். அதேபோல அஜித் சிங்கின் மகன் ஜெயந்த்சிங் சௌத்ரியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

அஜித் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தன்னை விவசாயிகளின் நலன்களுக்காக அர்ப்பணித்தவர். மத்திய அரசில் பல்வேறு துறைகளில் பல பொறுப்புகளை வகித்து திறமையாக செயல்பட்டவரை நாடு இழந்துள்ளது  என மோடி தனது இரங்கல் செய்தியில்  குறிப்பிட்டுள்ளாா்.

அஜித் சிங் மறைவையடுத்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்