மராத்தா இடஒதுக்கீடு ரத்து: ஆளும், எதிர்க்கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு

மராத்தா இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்த விவகாரத்தில் ஆளும், எதிர்க்கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி உள்ளனர்.

Update: 2021-05-06 04:41 GMT

மந்திரி அசோக் சவான் கருத்து

மராத்தா இடஒதுக்கீட்டை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அடுத்து ஆளும் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜனதா ஒருவர் மீது ஒருவர் குற்றம்சுமத்தி உள்ளனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மந்திரியுமான அசோக் சவான் கூறியிருப்பதாவது:-

மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக முந்தைய தேவந்திர பட்னாவிஸ் அரசு வலுவான சட்டத்தை கொண்டு வரவில்லை. அவர் மராத்தா மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டார். இதன் காரணமாகவே மராத்தா இடஒதுக்கீடு சட்டத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து உள்ளது.மாநில அரசின் கருத்தை எடுத்து வைக்க அட்டார்னி ஜெனரலுடன் எங்களது வக்கீல்கள் சந்திப்புக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால் அந்த கோரிக்கை மறுக்கப்பட்டது. மேலும் மத்திய சட்டமந்திரி ரவிசங்கர் பிரசாத்தை காணொலி காட்சி மூலம் சந்தித்து பேச முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விரும்பினார். அதையும் அவர் நிராகரித்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா குற்றச்சாட்டு

பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது:-

தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சியில் மராத்தா மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வந்தோம். இதை எதிர்த்து சிலர் ஐகோர்ட்டுக்கு சென்றனர். அப்போது எங்கள் அரசு எடுத்து வைத்த உறுதியான வாதத்தால் ஐகோர்ட்டு இடஒதுக்கீட்டை உறுதி செய்தது. ஆனால் தற்போதைய அரசு தெளிவான வாதத்தை எடுத்து வைக்க தவறியதால் இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது. இதில் மகா விகாஸ் அகாடி அரசின் தோல்வி கண்டுள்ளது.

இடஒதுக்கீடு பிரச்சினை குறித்தும், கொரோனா நிலவரம் குறித்தும் விவாதிக்க சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்