இருகரம் கூப்பி கேட்கிறேன், மராத்தா இடஒதுக்கீட்டை காப்பாற்ற உதவுங்கள்; பிரதமருக்கு, உத்தவ் தாக்கரே வேண்டுகோள்

மராத்தா இடஒதுக்கீட்டை காப்பாற்ற உடனடியாக உதவும்படி இருகரம் கூப்பி கேட்பதாக பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-05-06 03:10 GMT

மராத்தா சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இடஒதுக்கீடு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அடுத்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியதாவது:-

உடனடியாக உதவுங்கள்

மராத்தா இடஒதுக்கீடு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது எதிர்பாராதது. இந்த தருணத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும். மராத்தா மக்களின் இடஒதுக்கீட்டை பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக உதவ வேண்டும். இதற்காக இருகரம் கூப்பி நான் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

முத்தலாக் தடை சட்டத்துக்காக 370-வது பிரிவை ரத்து செய்தது, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீட்ெடடுத்தது போன்றவற்றில் காட்டிய அவசரத்ைத மராத்தா இடஒதுக்கீடு விஷயத்திலும் காட்ட வேண்டும்.

வெற்றி பெறும் வரையில் போராடுவோம்

மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையில், மராட்டியத்தை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. சம்பாஜி ராஜே பிரதமரை சந்திக்க ஒரு ஆண்டாக நேரம் கேட்டு வருகிறார். ஆனால் பிரதமர் நேரம் ஒதுக்காதது ஏன் என்று தெரியவில்லை. இடஒதுக்கீடு பிரச்சினையில் முடிவு எடுக்க பிரதமருக்கு உரிமை உள்ள நிலையில், அவர் நேரம் ஒதுக்காமல் இருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்க முடியாதது. இதற்காக யாரும் மக்களை தூண்டி விடும் வேலையில் ஈடுபட வேண்டாம். இந்த இடஒதுக்கீடு வெற்றி பெறும் வகையில் அரசு தொடர்ந்து போராடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்