இடஒதுக்கீடு சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது - மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே
மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது என மராட்டிய முதல்வர் உத்தவ் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கி மாநில அரசு சார்பில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று இந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றதின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதன்படி, மராட்டிய மாநிலத்தில், மராத்தா சமூகத்தினருக்கு, கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டம், அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்பதால் இந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது” என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் இந்த விவகாரத்தில் முடிவு எடுப்பதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை என்றும் இந்த சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் உச்சநீதிமன்ற அமர்வு கூறியது. இது குறித்து மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு துரதிருஷ்டவசமானது. மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான, சட்ட போராட்டம் தொடரும். இந்த விஷயத்தில் குடியரசு தலைவரும், பிரதமரும் உதவி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.