கொரோனா 2-வது அலை - 70 லட்சம் பேருக்கு வேலை இழப்பு
கொரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்படும் ஊரடங்கால் வேலை இழப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.;
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலையினால் இந்தியா கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது, இந்தக் காலக்கட்டத்தில் மட்டும் மேலும் 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று இந்திய பொருளாதார கணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்திற்குள் கொரோனா பரவல் குறையாவிட்டால் இந்த நிலை இன்னும் மோசமாகும் எனவும் கூறப்படுகிறது.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் இயக்குனர் மகேஷ் வியாஸ் இது பற்றி கூறும்போது, “ ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது ஏப்ரல் மாதத்தில் 75 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் நாட்டின் வேலையின்மை சதவீதம் 6.50 ஆக இருந்தது. இந்த நிலையில் ஒரு மாதத்தில் 7.97 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் வேலையிழப்பு அதிகரிப்பதை நான் பார்க்கிறேன். வேலை இழப்பு ஒருபக்கம் அதிகரித்து வரும் சூழலில் தொழிலாளர் பங்களிப்பு வீதமும் குறைந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச்சில் பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய முழு ஊரடங்கை அறிவித்த பிறகு கோடி கணக்கானோர் வேலை இழந்தனர், குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.