காரில் தனியாக சென்றாலும் மாஸ்க் அணிவது கட்டாயம்: டெல்லி உயர் நீதிமன்றம்
காரை தனியாகவே ஓட்டிச்சென்றாலும் மாஸ்க் அணிவது கட்டாயம் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் காரில் தனியாகவே சென்ற போதும் கூட, மாஸ்க் அணியவில்லை என ரூ.500 அபராதத்தை போக்குவரத்து போலீசார் தனக்கு விதித்ததாகவும், காரில் தனியாக சென்றால் மாஸ்க் அணிய தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளது எனவும் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சவுரவ் ஷர்மா என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், “ பொது இடங்களுக்கு செல்லும் போது காரை தனியாகவே ஓட்டிச்சென்றாலும் மாஸ்க் அணிவது கட்டாயம்” எனத்தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு ஆயுதம் போன்றது மாஸ்க் எனவும், காரில் தனியாகவே இருந்தாலும், டிராபிக் சிக்னலில் நிற்கும் போது கண்ணாடியை பலர் இறக்கி விட்டு நிற்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அந்த சமயத்தில் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதில் ஆட்சேபம் தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை. உங்கள் பாதுகாப்பிற்காகவே இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுகிறது. தடுப்பூசி போட்டிருந்தாலும் மாஸ்க் அணிவது கட்டாயம்” என தெரிவித்துள்ளது.