என்கவுண்ட்டர் முடிந்து வீடு திரும்பியபொழுது உயிரிழந்த வீரர்களின் உடல்கள் கிடந்தன; கிராமவாசி பேட்டி

சத்தீஷ்காரில் என்கவுண்டடரை முன்னிட்டு வீடுகளை போட்டு விட்டு கிராமவாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி சென்றனர்.

Update: 2021-04-07 00:21 GMT
பிஜாப்பூர்,

சத்தீஷ்காரின் நாராயண்பூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் 23ந்தேதி பாதுகாப்பு படையினர் சென்ற பேருந்து ஒன்றை சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வைத்து நக்சலைட்டுகள் தகர்த்தனர்.  இதில் மாவட்ட ரிசர்வ் படையை சேர்ந்த 5 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் பாதுகாப்பு வீரர்கள் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  இதன் ஒரு பகுதியாக பிஜாப்பூர் மாவட்டத்தில் சிறப்பு அதிரடி படை, மாவட்ட ரிசர்வ் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் கோப்ரா படை பிரிவை சேர்ந்த வீரர்கள் என நூற்றுக்கணக்கானோர் சில்கர் வனப்பகுதிக்கு சென்றனர்.

இதில், வீரர்கள் மீது நக்சலைட்டுகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதனை தொடர்ந்து இரு தரப்பிலும் கடுமையான துப்பாக்கி சூடு நடந்தது.

இந்த மோதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியானது.  20 பேர் காயமடைந்தனர்.  இதேபோன்று நக்சலைட்டுகள் தரப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர்.  15 பேர் காயமடைந்தனர்.  காயமடைந்த வீரர்களை மீட்க 9 ஆம்புலன்சுகள் மற்றும் இரண்டு எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் உடனடியாக சென்றன என தெரிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் பாதுகாப்பு படையினரில் 22 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது.  31 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே என்கவுண்ட்டர் தொடங்கியதும் கிராமவாசிகள் பலரும் தங்களது வீடுகளை விட்டு விட்டு தப்பியோடி உள்ளனர்.  அவர்கள் அனைவரும் மீண்டும் தங்களது வாழ்விடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.

இதுபற்றி கிராமவாசி ஒருவர் கூறும்பொழுது, கடந்த 3ந்தேதி என்கவுண்ட்டர் தொடங்கியது.  பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்த சத்தம் எங்களுக்கு கேட்டது. 

இதனால் உயிரிழந்து விடுவோம் என்ற அச்சத்தில் நாங்கள் தப்பி சென்றோம்.  கிராமத்தில் இருந்த அனைவரும் வேறு இடங்களுக்கு சென்றனர்.  நாங்கள் திரும்பி வந்தபொழுது, வீரர்களின் உடல்கள் கிடந்தன என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்