படப்பிடிப்பு தளங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்; தயாரிப்பாளர்களிடம் மராட்டிய முதல்வர் வலியுறுத்தல்
சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்பு தளங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் மராட்டிய முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
மராட்டியத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து அதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நோய் பரவல் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்களை காணொலி காட்சி மூலமாக சந்தித்தார். அப்போது, பெருகிவரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு தயாரிப்பாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்குவதாக தெரிவித்தனர். படப்பிடிப்பு தளங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என உறுதி அளித்தனர்.
இந்த தகவல் முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் நேற்று முன்தினம் நாடக தயாரிப்பாளர்கள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் காணொலி காட்சி மூலம் முதல்-மந்திரி உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.