பப்ஜி விளையாட்டின்போது தகராறு: கல்லால் அடித்து சிறுவன் படுகொலை

பப்ஜி விளையாட்டின்போது ஏற்பட்ட தகராறில் சிறுவன் கல்லால் அடித்து கொலை செய்யப் பட்டான். இதுதொடர்பாக மற்றொரு சிறுவன் கைது செய்யப்பட்டான்.

Update: 2021-04-04 21:42 GMT
முகமது அகீப்
மங்களூரு: ‘பப்ஜி’ விளையாட்டின்போது ஏற்பட்ட தகராறில் சிறுவன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டான். இதுதொடர்பாக மற்றொரு சிறுவன் கைது செய்யப்பட்டான். 

சிறுவன் மாயம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு கோட்டேகார் அருேக கோரமங்களா பகுதியை சேர்ந்தவர் முகமது ஹனீப். இவருக்கு திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளனர். இதில் 2-வது மகன் முகமது அகீப் (வயது 13). இந்த நிலையில் சிறுவன் முகமது அகீப், எப்போதும் செல்போனில் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி வந்தான். 

இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டாலும், நூதன முறையில் பப்ஜியை பதிவிறக்கம் செய்து முகமது அகீப் விளையாடி வந்துள்ளான். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு முகமது அகீப் வெளியே சென்றான். ஆனால் இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது ஹனீப் மற்றும் குடும்பத்தினர் முகமது அகீப்பை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. 

கல்லால் அடித்து கொலை

இதுகுறித்து முகமது ஹனீப், உல்லால் போலீசில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் நேற்று காலை, முகமது ஹனீப்பின் வீட்டின் அருகே உள்ள ஒரு பள்ளியின் சுற்றுச்சுவரை ஒட்டி சிறுவன் முகமது அகீப், கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். இதனை பார்த்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் முகமது ஹனீப்புக்கு தகவல் தெரிவித்தனர். சிறுவன் உடலை பார்த்து முகமது ஹனீப் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். 

இதுபற்றிய தகவல் அறிந்ததும் உல்லால் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், முகமது அகீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவன் முகமது அகீப் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

போலீஸ் கமிஷனர் விசாரணை

இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது சிறுவனின் தந்தை முகமது ஹனீப், அந்தப்பகுதியை சேர்ந்த தினேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுவன் உள்பட சிலருடன் முகமது அகீப் தினமும் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டு விளையாடி வந்துள்ளான் என்று தெரிவித்தார். இதற்கிடையே இதுபற்றிய தகவல் அறிந்ததும் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். 

சிறுவனின் தந்தை கொடுத்த தகவலின்பேரில் தினேஷ் உள்பட அந்தப்பகுதியை சேர்ந்த சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முகமது அகீப்பை சிறுவன் தினேஷ் தான் கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. தினேஷ் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளனர். 

‘பப்ஜி’ விளையாட்டில் தகராறு

அதாவது, முகமது அகீப், தினேஷ் மற்றும் அந்தப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஒன்றாக பப்ஜி விளையாட்டு விளையாடி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் தினேஷ், முகமது அகீப் ஆகியோர் ஒன்றாக பப்ஜி விளையாடி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், முகமது அகீப் ஒரு கல்லை எடுத்து தினேஷ் மீது வீசி தாக்கி உள்ளான். 

அப்போது ஆத்திரமடைந்த தினேஷ், பதிலுக்கு கீழே கிடந்த கற்களை எடுத்து முகமது அகீப்பை சரமாரியாக தாக்கி உள்ளான். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த முகமது அகீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். 

இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ், முகமது அகீப்பின் உடலை அங்குள்ள பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே போட்டுள்ளான். பின்னர் உடலை மறைக்க தென்னை ஓலைகளை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. 

சிறுவன் கைது

இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அகீப்பை கொலை செய்ததாக தினேசை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தினேசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். 

பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்