ஆபாச வீடியோ விவகாரம்: ரமேஷ் ஜார்கிகோளி இன்று விசாரணைக்கு ஆஜராகிறார்?
ஆபாச வீடியோ விவகாரத்தில் ரமேஷ் ஜார்கிகோளி இன்று விசாரணைக்கு ஆஜராவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
பெங்களூரு: ஆபாச வீடியோ விவகாரத்தில் ரமேஷ் ஜார்கிகோளி இன்று விசாரணைக்கு ஆஜராவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
ஆபாச வீடியோ
முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ குறித்து, சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஆபாச வீடியோவில் இருந்ததாக கூறப்படும் இளம்பெண்ணிடம் 5 நாட்கள் போலீசார் விசாரணை நடத்தி சில தகவல்களை பெற்று இருந்தனர்.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு ஆடுகோடியில் உள்ள தொழில்நுட்ப மையத்தில் வைத்து ஆபாச வீடியோ விவகாரம் குறித்து ரமேஷ் ஜார்கிகோளியிடம், போலீசார் 3½ மணி நேரம் விசாரித்து இருந்தனர். பின்னர் அவர் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தார்.
விசாரணைக்கு ஆஜராவாரா?
இந்த நிலையில் இளம்பெண்ணிடம் நடத்திய விசாரணையின் போது ரமேஷ் ஜார்கிகோளி தனக்கு தங்கநகைகள், விலையுயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்ததாக இளம்பெண் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே விசாரணைக்கு ஆஜராகும்படி ரமேஷ் ஜார்கிகோளிக்கு போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தனர்.
ஆனால் அவர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் ஏப்ரல் 5-ந் தேதி (அதாவது இன்று) விசாரணைக்கு ஆஜராக ரமேஷ் ஜாா்கிகோளிக்கு போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். இதனால் இன்று (திங்கட்கிழமை) ரமேஷ் ஜார்கிகோளி விசாரணைக்கு ஆஜராவாரா? என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
இளம்பெண்ணுக்கு தங்க நகைகள்...
ரமேஷ் ஜார்கிகோளி ஆஜராகும் பட்சத்தில் அவரிடம் இளம்பெண்ணுக்கு தங்கநகைகள் வாங்கி கொடுத்தது, பரிசு பொருட்கள் வழங்கியது தொடர்பாக விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.