கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம்; கேரள பிரசாரத்தில் ராகுல் வாக்குறுதி
கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி வழங்கினார்.
கேரளாவில் ராகுல் பிரசாரம்
தமிழக சட்டசபை தேர்தலுடன் கேரள சட்டசபைக்கும் நாளை ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு இந்த முறை இடதுசாரி கூட்டணியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சி களம் இறங்கி உள்ளது.கவர்ச்சிகரமான வாக்குறுதிமூலம் மக்களின் வாக்குகளை அள்ள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியின் பிரசார பொதுக்கூட்டங்களில் ஏழைகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் பற்றி பேசப்படுகிறது.இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் விதிவிலக்கு இல்லை. அவர் மனந்தாவாடி பகுதியில் உள்ள வெள்ளமுண்டாவில் நேற்று நடந்த காங்கிரஸ் கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம்
அப்போது அவர் கூறியதாவது:-
கேரளாவில், வேறு எந்த இந்திய மாநிலத்திலும் நடந்திராத ஒன்றை புரட்சிகரமாக செய்வதற்கு காங்கிரஸ் கூட்டணி விரும்புகிறது. அந்த வகையில், கேரளாவில் ஏழை, எளிய மக்களுடைய கைகளுக்கு பணம் போய்ச்சேர வேண்டும் என்று நினைக்கிறோம். கேரளாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இங்கு உள்ள ஒவ்வொரு ஏழையும் மாதம் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் பெறுவார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கிடைக்கும். ஒருமாதம் கூட தவறாமல் அவர்களின் வங்கி கணக்கில் இந்த தொகை செலுத்தப்பட்டு விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த திட்டம் கேரளாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அதை அவர் காங்கிரஸ் ஆளுகிற எல்லா மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த விரும்புகிறார்.
விஷ்ணு கோவிலில் ராகுல் தரிசனம்
இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொள்வதற்கு முன்பாக, கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலுடன் திருநெல்லியில் உள்ள மகாவிஷ்ணு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதை அவர் டுவிட்டரிலும் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “வயநாட்டில் திருநெல்லி கோவிலுக்கு காலையில் சென்றேன். அந்த இடத்தின் அமைதியான சூழல் நீண்ட நேரம் எதிரொலிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதும் இந்த கோவிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தது நினைவுகூரத்தக்கது.