மராட்டிய மாநிலத்தில் இன்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு அமல் - அமைச்சர் அஸ்லாம் ஷேக்
மராட்டிய மாநிலத்தில் இன்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார்.
மும்பை,
கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த சூழலில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில், தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவல் அதிகரித்துவருகிறது.
இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் முதல் இரண்டு மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு கடந்த 4 வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதனிடையே இன்று இந்தியாவில் ஒரே நாளில் 93,249 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் மராட்டியம், டெல்லி, கோவா, கர்நாடக போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் எதிரொலியாக மராட்டிய மாநிலத்தில் இன்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை இருக்கும். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். உணவுகளை எடுத்துச் செல்லுதல் மற்றும் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே உணவகங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அலுவலகங்களைப் பொறுத்தவரை, ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். தற்போதைய கட்டுப்பாடுகளுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்” என்று அமைச்சர் அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார்.