துபாய், சார்ஜாவில் இருந்து கடத்தல்: மங்களூரு விமான நிலையத்தில் ரூ.1.18 கோடி தங்கம் பறிமுதல்

துபாய், சார்ஜாவில் இருந்து விமானங்களில் மங்களூருவுக்கு கடத்தி வந்த ரூ.1.18 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2021-04-03 21:38 GMT
மங்களூரு: துபாய், சார்ஜாவில் இருந்து விமானங்களில் மங்களூருவுக்கு கடத்தி வந்த ரூ.1.18 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மங்களூரு விமான நிலையம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்துக்கு துபாய், சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட உள்நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. இதனால் தினமும் மங்களூரு விமான நிலையத்துக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். 

அவ்வாறு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் மற்றும் செல்லும் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்க வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளை சுங்க வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். 

2 பேர் கைது

இந்த நிலையில், சார்ஜாவில் இருந்து நேற்று முன்தினம் மங்களூரு விமான நிலையத்துக்கு தனியார் விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்க வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினார்கள். அப்போது, 2 பயணிகளின் நடவடிக்கையில் சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. 
இதனால் அவர்களை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். 

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களின் உடைமைகள் மற்றும் அவர்களின் ஆடைகள் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவர்கள் 2 பேரும் தங்களின் ஆடை மற்றும் காலணியில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. 

அவர்களிடம் இருந்து ரூ.26 லட்சத்து 43 ஆயிரத்து 540 மதிப்பிலான 576 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் பஜ்பே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மணிபரம்பு பகுதியை சேர்ந்த அப்துல் சலாம், முகமது அஸ்ரப் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். 

மற்றொரு சம்பவம்

இதேபோல, நேற்று காலை துபாயில் இருந்து மங்களூரு விமான நிலையத்துக்கு தனியார் விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்க வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பயணி, தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த நபரை பிடித்து சுங்க வரித்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

விசாரணையில், அவர் உல்லாலை சேர்ந்த முகமது ஆசிப் (28) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.92 லட்சத்து 27 ஆயிரத்து 590 மதிப்பிலான 1 கிலோ 933 கிராம் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவரையும் சுங்க வரித்துறை அதிகாரிகள் பஜ்பே போலீசாரிடம் ஒப்படைத்தனர். பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஆசிபை கைது செய்தனர்.

ரூ.1.18 கோடி தங்கம் பறிமுதல்

மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஆகிய 2 நாட்களில் துபாய், சார்ஜாவில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1.18 கோடி மதிப்பிலான 2½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 3 பேரிடமும் பஜ்பே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்