மேற்குவங்காளத்தை திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் அராஜக பூமியாக மாற்றியுள்ளனர் - உ.பி. முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் பேச்சு

மேற்குவங்காளத்தை திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் அராஜக பூமியாக மாற்றியுள்ளனர் என்று உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Update: 2021-04-03 07:55 GMT
கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 6 தொகுதிகளுக்கு முறையே ஏப்ரல்  6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்குவங்காள தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மூத்த தலைவரும், உத்தரபிரதேச முதல்மந்திரியுமான யோகி ஆதித்யநாத் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

அம்மாநிலத்தின் ஹவ்ரா மாவட்டத்தில் நடந்த பிரசாரத்தில் உ.பி. முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் பேசுகையில், மேற்குவங்காளம் நாட்டின் கலாச்சார தேசியவாதத்தின் பூமியாக இருந்துவந்தது. ஆனால், மேற்குவங்காளத்தை திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் ரவுடிசம் மற்றும் அராஜக பூமியாக மாற்றியுள்ளனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் சூழ்நிலையை மாற்றி அவர்களின் திருப்திக்காக இந்த பூமியை பலியாக்கிவிட்டனர். மேற்குவங்காளத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என்று களநிலவர போக்குகள் காட்டுகின்றன’ என்றார்.

மேலும் செய்திகள்