மக்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது - பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா குற்றச்சாட்டு
அசாம் மக்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்துவதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா குற்றஞ்சாட்டியுள்ளார்.
கவுகாத்தி,
126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 47 தொகுதிகளுக்கு கடந்த 27-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 39 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்றது. 40 தொகுதிகளில் முன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் பட்ருதீன் ஜமால் என்பவரின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, அஞ்சலிக் ஞான மோட்சா, ராஷ்டிரிய ஜனதா தளம், போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜக கூட்டணியில் அசோம் ஞான பரிஷத் கட்சி, ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில், அசாம் தேர்தலில் காங்கிரஸ் 5 வாக்குறுதிகளை அளித்துள்ளது. அவற்றில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் காங்கிரஸ் உறுதியாக இருக்கும் என்பதும் அடக்கம்,
இந்நிலையில், அசாம் மக்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது என்று பாஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜேபி நட்டா இன்று கூறுகையில், அசாமில் காங்கிரஸ் அளித்துள்ள 5 தேர்தல் வாக்குறுதிகளில் குடியுரிமை திருத்தச்சட்டமும் இடம்பெற்றுள்ளது. இது போன்ற வாக்குறுதிகளை வழங்கியவர்கள் யார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை ஒரு மாநில அரசின் சட்டம் மீற முடியுமா? காங்கிரஸ் மக்களை தவறாக வழிநடத்துகிறது. இது காங்கிரசின் மன ரீதியிலான திவால்நிலையை காட்டுகிறது' என்றார்.