பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போண்டா, பஜ்ஜி விற்று போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
போண்டா, பஜ்ஜி விற்று போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்;
பெங்களூரு: கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 7-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். அதாவது தங்களை அரசு ஊழியர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 6-வது சம்பள ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசுக்கு, ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந் தேதியில் இருந்தே போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அதாவது பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பஸ் நிலையங்களுக்கு போக்குவரத்து ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்தனர். பின்னர் அவர்கள், பஸ் நிலையத்திலேயே போண்டா மற்றும் பஜ்ஜி போட்டு விற்றனர். சில பஸ் நிலையங்களில் டீ, காபி போட்டு போக்குவரத்து ஊழியர்கள் விற்றனர்.
பெங்களூருவில் விவசாய சங்க தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகர் தலைமையில் போக்குவரத்து ஊழியர்கள் போண்டா, பஜ்ஜி போட்டு விற்றார்கள். வருகிற 7-ந் தேதிக்குள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.