கோலார் தங்கவயலில் மாயமான கல்லூரி மாணவி ஏரியில் பிணமாக மீட்பு

கோலார் தங்கவயலில் மாயமான கல்லூரி மாணவி ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2021-04-02 21:34 GMT
பிணமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவி கிருத்திகா.
கோலார்: கோலார் தங்கவயலில் மாயமான கல்லூரி மாணவி ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

கல்லூரி மாணவி

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் மாரிக்குப்பம் கிராக்கர்ஸ் லைனை சேர்ந்தவர் கிருபாகரன். இவரது மகள்  கிருத்திகா(வயது 17). இவர் ராபர்ட்சன்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.யூ.சி.  படித்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து கிருத்திகா கல்லூரிக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனாலும் கிருத்திகா கிடைக்கவில்லை. அவர் திடீரென மாயமாகி விட்டதை அறிந்து அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

ஏரியில் பிணமாக மீட்பு

நேற்று முன்தினம் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ராமபுரா ஏரியில் ஒரு இளம்பெண்ணின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றினர். 

பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அது மாயமான கல்லூரி மாணவி கிருத்திகா என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கிருத்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா?

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கிருத்திகா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவில்லை. அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்