மந்திரி பதவியில் இருந்து என்னை நீக்கினாலும் பயப்படமாட்டேன்; மந்திரி ஈசுவரப்பா பரபரப்பு பேட்டி

முதல்-மந்திரி எடியூரப்பா என்னை மந்திரி பதவியில் இருந்து நீக்கினாலும் பயப்படமாட்டேன் என்று மந்திரி ஈசுவரப்பா தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-04-02 21:30 GMT
மந்திரி ஈசுவரப்பா.
மைசூரு: முதல்-மந்திரி எடியூரப்பா என்னை மந்திரி பதவியில் இருந்து நீக்கினாலும் பயப்படமாட்டேன் என்று மந்திரி ஈசுவரப்பா தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 மந்திரி ஈசுவரப்பா 

கர்நாடக மாநில கிராம மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா, தனது துறையில் முதல்-மந்திரி எடியூரப்பா தலையிடுவதாக கவர்னரிடம் கடிதம் எழுதி உள்ளார். மந்திரி ஈசுவரப்பா, முதல்-மந்திரிக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தநிலையில் மந்திரி ஈசுவரப்பா, மைசூருவுக்கு நேற்று வந்தார். 

அங்கு அவர், அதிகாரிகளுடன் ைமசூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம வளர்ச்சி சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் மந்திரி ஈசுவரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

 நான், முதல்-மந்திரி எடியூரப்பா மீது புகார் தெரிவித்து கவர்னரிடம் கடிதம் கொடுத்திருப்பது சொந்த விஷயத்திற்காக அல்ல. யாரும் சட்டத்தை மீறக்கூடாது என்ற நோக்கத்துடன் கடிதம் அனுப்பி உள்ேளன். எனது துறையில் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை எனக்கு தெரிவிக்காமல் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. 

பயப்பட மாட்டேன்

இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்ற காரணத்திற்காக கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இந்த விஷயத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா என்னை(ஈசுவரப்பா) மந்திரி பதவியில் இருந்து நீக்கினாலும் பயப்பட மாட்டேன். அதேசமயத்தில் நானாக முன்வந்து மந்திரி பதவியை ராஜினாமா செய்யமாட்டேன். எதிர்வரும் நாட்களில் பா.ஜனதா மேலிட தலைவர்கள், கர்நாடகத்திற்கு வருகிறார்கள். அவர்கள், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள்.

மத்திய அரசு நீரை சேமிப்பதற்காக ஜலசக்தி அபியான் என்ற புதிய திட்டத்தை கொண்டு வருகிறது. இன்னும் 100 நாட்களில் நீர் சேமிப்புக்கான பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்