கர்நாடகாவில் மந்திரியின் வீட்டுக்கு சென்று தடுப்பூசி போட்ட விவகாரம்; சுகாதார அதிகாரி சஸ்பெண்டு
கர்நாடகாவில் மந்திரியின் வீட்டுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்ட சம்பவத்தில் சுகாதார அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பா தலைமையிலான மந்திரிசபையில் விவசாய துறை மந்திரியாக பணியாற்றி வருபவர் பி.சி. பாட்டீல். இவரது வீடு ஹாவேரி மாவட்டம் இரேகெரூர் டவுனில் அமைந்து உள்ளது. இந்த நிலையில் கடந்த 2ந்தேதி காலை மருத்துவர்கள், செவிலியர்களை தனது வீட்டிற்கு வரவழைத்த மந்திரி பி.சி.பட்டீல் தனது வீட்டில் வைத்தே கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார். மேலும் அவரது மனைவிக்கும் வீட்டில் வைத்தே தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மந்திரி பி.சி. பாட்டீல், நானும், எனது மனைவியும் இரேகெரூரில் உள்ள எங்கள் வீட்டில் வைத்து கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி குறித்து உலக நாடுகள் பாராட்டி வரும் நிலையில், சிலர் தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று பதிவிட்டார்.
இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த பாட்டீல், தடுப்பூசி போட மருத்துவமனைக்கு நான் சென்றால், பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், வீட்டில் வைத்து தடுப்பூசி போட்டு கொண்டபொழுது, மக்களை சந்தித்து என்னால் பேசவும் முடிந்தது என தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறும்பொழுது, விதிகளின்படி இதற்கு அனுமதி இல்லை. மாநில அரசிடம் இது தொடர்புடைய விளக்க அறிக்கையை நாங்கள் கேட்டுள்ளோம் என கூறினார்.
இந்த சம்பவத்தில் கடந்த மார்ச் 3ந்தேதி, ஹாவேரி சுகாதார அதிகாரியான டாக்டர் ராஜேந்திர தொட்டமணி, தாலுகா சுகாதார அதிகாரியான ஆர். மகந்தருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், இந்த சம்பவத்தில் மகந்தர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.