ஐதராபாத்தை சேர்ந்தவர் பாஜகவிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மேற்குவங்காளம் வந்துள்ளார் - ஒவைசியை விமர்சித்த மம்தா

பாஜகவிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு ஐதராபாத்தை சேர்ந்த நபர் மேற்குவங்காளம் வந்துள்ளார் என்று தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.;

Update: 2021-04-02 08:02 GMT
கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 6 தொகுதிகளுக்கு முறையே ஏப்ரல்  6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், மேற்குவங்காளத்தில் நடைபெற உள்ள அடுத்தகட்ட தேர்தலில் சில தொகுதிகளில் ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,  அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசியை மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். 

அம்மாநிலத்தின் கோச் பிஹர் பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, நான் நந்திகிராம் தொகுதியில் நிச்சயம் வெற்றிபெறுவேன். அதைப்பற்றி கவலைப்படவேண்டியதில்லை. ஆனால், என்னுடன் சேர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறைந்தது 200 பேர் வெற்றிபெற வேண்டும். அப்போழுதுதான் நாங்கள் ஆட்சியமைக்க முடியும். அதனால் தான் நீங்கள் உங்கள் வாக்குகளை திரிணாமுல் காங்கிரசுக்கு அளிக்க வேண்டும். 

பாஜகவிடம் இருந்து பணத்தை பெற்றுவிட்டு ஐதராபாத்தை சேர்ந்த நபர் (அசாதுதீன் ஒவைசி) மேற்குவங்காளம் வந்துள்ளார். அவரை இங்கு அனுமதித்துவிடாதீர்கள்’ என்றார். 

மேலும் செய்திகள்