“மேற்கு வங்கத்தில் நடந்து கொண்டிருக்கும் மகாபாரதம் உண்மையான மகாபாரதத்தை விட மிக கடுமையானது” - சஞ்சய் ராவத் எம்.பி. கருத்து
மேற்கு வங்கத்தில் நடந்து கொண்டிருக்கும் மகாபாரதம் உண்மையான மகாபாரதத்தை விட மிக கடுமையானது என சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மும்பை,
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எதிர்க்கட்சி தலைவர்களான சோனியாகாந்தி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் “ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீதான பா.ஜனதாவின் தாக்குதலை தடுக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நேற்று கூறியதாவது:-
5 மாநில தேர்தல், குறிப்பாக அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் நடக்கும் தேர்தல்களின் முடிவுகள் தேசிய அரசியலில் அடுத்தக்கட்ட போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். இந்த தேர்தலுக்கு பிறகு கூட்டணி தன்மை குறித்து விவாதிக்கப்படும். இதன்மூலம் மேலும் தெளிவு இருக்கும்.
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு மம்தா பானர்ஜி அனுப்பிய கடிதம் வந்துள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்து கொண்டிருக்கும் மகாபாரதம் உண்மையான மகாபாரதத்தை விட மிக கடுமையானது. மேற்குவங்க தேர்தலை முழு நாடும் கூர்ந்து கவனித்து வருகிறது. அந்த மாநில மக்களும் புத்திசாலிகள். இந்த போர் கடினமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் மம்தா பானர்ஜி வெற்றி பெறுவார்.
தமிழ்நாடு, கேரளாவிலும் மக்களின் மனநிலையை கணிக்க முடிகிறது. நாட்டில் ஜனநாயகம் மீதான தாக்குதல் புதியதல்ல. இந்த தாக்குதல் நிகழும்போதெல்லாம் மக்களும், எதிர்க்கட்சிகளும் அதை எதிர்த்து போராடி உள்ளனர். இதுதான் நமது ஜனநாயகத்தின் பலம்.
இவ்வாறு அவர் கூறினார்.