நஞ்சன்கூடு அருகே வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ; வனவிலங்குகள் தப்பி ஓடியதால் பரபரப்பு

நஞ்சன்கூடு அருகே வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் வனவிலங்குகள் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-04-01 21:27 GMT
மைசூரு: நஞ்சன்கூடு அருகே வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் வனவிலங்குகள் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

வனப்பகுதியில் காட்டுத்தீ

கர்நாடகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள செடி, கொடி, மரங்கள் காய்ந்து வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா கொனனூரு அருகே கட்டே மாதேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கட்டே மாதேஸ்வரா கோவிலை ஒட்டிய வனப்பகுதியில் திடீரென்று காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ வனப்பகுதியில் காய்ந்து கிடந்த செடி, கொடிகளில் பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் பல ஏக்கரில் உள்ள மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் எரிந்து நாசமானது. 

வனவிலங்குகள் ஓட்டம்

மேலும் பலத்த காற்று வீசுவதால் தீயில்  பல ஏக்கர் வனப்பகுதி இரையாகியுள்ளது. இந்த தீயில் பறவைகள், வனவிலங்குகள் சிக்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காட்டுத்தீ ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் வசித்து வந்த காட்டு யானைகள், சிறுத்தை, புலி, மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அங்கிருந்து தப்பி ஓடி வருகின்றன. 

பயங்கரமாக பிடித்த காட்டுத்தீயில் இருந்து தப்பிக்க மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  
தீவிபத்து பற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் தீ இன்னும் கட்டுக்குள் வரவில்லை. 20 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி காட்டுத்தீயில் நாசமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. 

2 மாதத்தில் 5வது முறை

இந்த வனப்பகுதியில் கடந்த 2 மாதங்களில்  5வது முறையாக நேற்று முன்தினம் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வனப்பகுதி முற்றிலும் அழிந்து போய்விட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதுவே காட்டுத்தீ ஏற்பட காரணம் என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்