உத்தரகாண்டின் ஹரித்வாரில் வரலாற்று சிறப்பு மிக்க கும்பமேளா தொடங்கியது; பக்தர்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள்

உத்தரகாண்டின் ஹரித்வாரில், வரலாற்று சிறப்பு மிக்க கும்பமேளா நேற்று முறைப்படி தொடங்கியது.

Update: 2021-04-01 19:19 GMT
லட்சக்கணக்கான பக்தர்கள்
உத்தரகாண்டின் ஹரித்வாரில் கங்கை நதியில் புனித நீராடும் கும்பமேளா நிகழ்ச்சி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு இந்த கும்பமேளா நடத்தப்பட்ட நிலையில், அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.இந்த ஏற்பாடுகள் முடிந்து நேற்று இந்த கும்பமேளா நிகழ்ச்சி முறைப்படி தொடங்கியது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கும்பமேளாவில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மாதமாக குறைப்பு
கொரோனா பீதிக்கு மத்தியில் இந்த ஆண்டு நடைபெறும் கும்பமேளாவில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதில் முக்கியமாக கும்பமேளாவின் கால அளவு 1 மாதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமாக இந்த சிறப்பு நிகழ்ச்சி சுமார் 4 மாதங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.இதைப்போல கும்பமேளாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவரும் அதற்கான இணையதளத்தில் முறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக புனித 
நீராடுவதற்கு முந்தைய 72 மணி நேரத்துக்குள் பரிசோதிக்கப்பட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என உத்தரகாண்ட் ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு
இதைப்போல கொரோனா தடுப்பூசி போட்டிருந்தாலும், அவர்களும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அத்துடன் புனித நீராடும் இடங்களில் முககவசம், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டும்.மேலும் ஹரித்வாரில் தினந்தோறும் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளை 5 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக அதிகரிக்குமாறும் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. உத்தரகாண்டில் நேற்று முன்தினம் 293 பேர் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் ஹரித்வார் மற்றும் டேராடூன் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

பலத்த பாதுகாப்பு
வருகிற 30-ந்தேதி வரை நடைபெறும் கும்பமேளாவில் சைத்ரா பிரதிபாடாவையொட்டி 13-ந்தேதியும், ராம நவமியையொட்டி 21-ந்தேதியும் அதிகமான பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கும்பமேளாவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக 12 ஆயிரம் போலீசார், 400 துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள். இதைப்போல 38 தற்காலிக மருத்துவமனைகள், 200 டாக்டர்கள், 1500 துணை மருத்துவ பணியாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்