முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு கொரோனா பாதிப்பு
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
பீதியடைய தேவை இல்லை
நாட்டில் கொரோனா 2-வது அலை தொடங்கி தீவிரமாக பரவி வருகிறது. தினசரி 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கர்நாடகத்திலும் 2-வது அலை தொடங்கிவிட்டது. மாநிலத்தில் வைரஸ் தொற்று பரவல், கொரோனா உயிரிழப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இது கர்நாடக மக்களையும், மாநில அரசையும் அச்சம் அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் 87 வயதாகும் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
எனக்கும், எனது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. எங்களின் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் நாங்கள் தனிமைப்படுத்தி கொண்டுள்ளோம். கடந்த சில நாட்களாக என்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எனது கட்சியினர் மற்றும் நலம் விரும்பிகள் யாரும் பீதியடைய தேவை இல்லை.
இவ்வாறு தேவேகவுடா குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி விசாரித்தார்
தேவேகவுடாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தகவல் அறிந்ததும் பிரதமர் மோடி தேவேகவுடாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உடல்நிலை குறித்து விசாரித்தார். அவர் விரைவாக குணம் அடைய மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அதுேபால் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில பா.ஜனதா தலைவா் நளின்குமார் கட்டீல், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் மந்திரிகள் பலர், தேவேகவுடா விரைவாக குணம் அடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
பிரதமர் தன்னை தொடர்பு கொண்டு பேசியது குறித்து டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள தேவேகவுடா, "எனது உடல்நிலை குறித்து பிரதமர் மோடி செல்போனில் தொடர்பு கொண்டு என்னிடம் நலம் விசாரித்தார். இதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்தியாவில் எந்த நகரத்திலும் எனது விருப்பத்தின்பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற உதவுவதாக கூறினார். பெங்களூருவில் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். எனது உடல்நிலை குறித்து அவருக்கு தொடர்ந்து விவரங்களை தெரிவிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தேவேகவுடா, அவரது மனைவி சென்னம்மா ஆகியோர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.