காஷ்மீரில் கடந்த ஆண்டு 221 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் - உள்துறை அமைச்சகம் தகவல்
ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு 221 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முதல் தொடங்கியது. நேற்றைய கூட்டத்தொடரில் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வின் 2-வது நாள் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் மீண்டும் முழக்கமிட்டனர்.
இதனால், இரு அவைகளும் சிறுது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின், மக்களவை கூடியபோது பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷான் ரெட்டி பதிலளித்தார்.
அதில், ஜம்மு-காஷ்மீரில் 2018 ஆம் ஆண்டு 257 பயங்கரவாதிகள், 2019 ஆம் ஆண்டில் 157 பயங்கரவாதிகள், 2020 ஆம் ஆண்டில் 221 பயங்கரவாதிகள், 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வரை 3 பயங்கரவாதிகள் என மொத்தம் 638 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
மேலும், 2018 முதல் 2021 பிப்ரவரி வரை ஜம்மு காஷ்மீரில் 116 பொதுமக்களும், ஜம்மு-காஷ்மீரை தவிர்த்து பிறபகுதிகளில் 3 பொதுமக்கள் என மொத்தம் 119 பொதுமக்கள் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார். மேலும், பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாக இருந்ததாக 42 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பயங்கரவாத செயல்கள் பெரும்பாலும் அண்டைநாட்டின் ஆதரவில் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.