மேற்கு வங்காளத்தில் ஜனநாயக அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி பேச்சு
மேற்கு வங்காளத்தில் ஜனநாயக அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது என பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.
கொல்கத்தா,
294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்குவங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதி நடைபெறுகிறது. இறுதிகட்டமான 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் காங்கிரஸ்-இடதுசாரிகள்- இந்திய மதசார்பற்ற முன்னணி கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் பாஜக சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,
பிரிகேட் பரேட் மைதானம் மிகச்சிறத்தை தலைவர்களையும் பார்த்துள்ளது. மேற்குவங்காளத்தின் வளர்ச்சியை சீர்குலைத்தவர்களையும் பார்த்துள்ளது. மாற்றத்திற்கான நம்பிக்கையை மேற்குவங்காள மக்கள் ஒருபோதும் கைவிடுவதில்லை. அமைதி, தங்க வங்காளம், அதிநவீன வங்காளம் ஆகியவையே வங்காளத்திற்கு வேண்டும்.
இந்த தேர்தலில் ஒருபக்கத்தில் வங்காளத்திற்கு எதிரான திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளன. மறுபக்கத்தில் வங்காள மக்கள் உள்ளனர். ’தங்க வங்காளம்’ கனவை நிறைவேற்றப்படும். வங்காளத்திற்கு வளர்ச்சி, முதலீடு அதிகரிப்பு, வங்காள கலாச்சார பாதுகாப்பு, மாற்றத்தை கொண்டுவருவதற்காகவே நான் இன்று இங்கு வந்துள்ளேன்.
வங்காளத்தின் வளர்ச்சிக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை. அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சி அதற்கடுத்த 25 ஆண்டுக்கான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். இங்கு (மேற்குவங்காளம்) ஜனநாயக அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த அமைப்பை பாஜக வலுப்படுத்தும். அரசு அமைப்பு, போலீஸ், நிர்வாகம் ஆகியவற்றின் மீதான பொதுமக்கள் நம்பிக்கை கொள்வதற்கான மாற்றத்தை நாங்கள் மீண்டும் கொண்டுவருவோம்’ என்றார்.