கர்நாடக விவசாயத்துறையின் தூதராக நடிகர் தர்ஷன் நியமனம்
கர்நாடக விவசாயத்துறையின் தூதராக நடிகர் தர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநில அரசின் விவசாயத்துறையின் தூதராக நடிகர் தர்ஷன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை தூதராக நியமிக்கும் விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
சம்பளம் பெறாமல் நடிகர் தர்ஷன் விவசாயத்துறையின் தூதராக செயல்படுவதாக ஒப்புக் கொண்டுள்ளார். இது நமக்கு பெருமை அளிக்கும் விஷயம் ஆகும். இதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். தர்ஷன் நடித்துள்ள ராபர்ட் படம் வெளியாக உள்ளது. அதை நீங்கள் பாருங்கள். நானும் அந்த பாடத்தை பார்த்து மகிழ்வேன். விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். அவர்களின் மேம்பாட்டிற்காக கர்நாடக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
அதைத்தொடர்ந்து பேசிய விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல், "நடிகர் தர்ஷன் விவசாயத்துறை தூதராக செயல்படுவது பெருமை அளிப்பதாக உள்ளது. அவர் நடிப்பதுடன் விவசாயம், கால்நடை தொழிலையும் செய்கிறார். விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டவர் தர்ஷன்" என்றார். நடிகர் தர்ஷன் பேசுகையில், "போலீஸ் துறையில் பணியாற்றியவர் பி.சி.பட்டீல். அவர் விவசாயத்துறை மந்திரியாக பணியாற்றி வருகிறார். விவசாயத்துறையின் திட்டங்களை நான் விளம்பரப்படுத்துவேன்" என்றார்.