பொதுமக்கள் தங்கள் வசதிப்படி 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் - மத்திய சுகாதார மந்திரி அறிவிப்பு
பொதுமக்கள் தங்கள் வசதிப்படி 24 மணி நேரமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம், இனி நேரம் ஒரு தடை இல்லை என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வைரஸ் தொற்றை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு, அவற்றின் அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 16-ந் தேதி தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. நேற்று காலை 7 மணி வரையில், 3 லட்சத்து 12 ஆயிரத்து 188 அமர்வுகளில், 1 கோடியே 56 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
67 லட்சத்து 42 ஆயிரத்து 187 சுகாதார பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 27 லட்சத்து 13 ஆயிரத்து 144 சுகாதார பணியாளர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
இதே போன்று 55 லட்சத்து 70 ஆயிரத்து 230 முன்கள பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 834 முன்கள பணயாளர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும், நாள்பட்ட நோயுடன் போராடும் 45 வயதுக்கு மேற்பட்ட 71 ஆயிரத்து 896 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் 5 லட்சத்து 22 ஆயிரத்து 458 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு இனி நேரம் ஒரு தடையாக இருக்காது.
பொதுமக்கள் தங்கள் வசதிப்படி வாரத்தின் எந்த ஒரு நாளிலும் 24 மணி நேரமும் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் நேற்று டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக நேரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று கருதி மத்திய சுகாதார அமைச்சகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
இதையொட்டி மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “பொதுமக்கள் தங்கள் வசதிப்படி எந்த நேரத்திலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். பிரதமர் நரேந்திர மோடி ஆரோக்கியத்தையும், நாட்டு மக்களின் நேரத்தையும் மதிக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசியின் வேகத்தை அதிகரிப்பதற்காக நேர தடையை அரசு நீக்கி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.