தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி - காங்கிரஸ் தலைவர் பிரிதிவிராஜ் சவான் கண்டனம்
தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் பிரிதிவிராஜ் சவான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மும்பை,
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ந் தேதி சுகாதார, முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பிற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதேபோல தனியார் ஆஸ்பத்திரிகளும் ரூ.250-க்கு தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.250-க்கு தடுப்பூசி செலுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
முதல் கட்டமாக கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணிக்காக தலா ரூ.210 விலையில் 1.65 கோடி டோஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதன்படி ரூ.35 ஆயிரம் கோடி கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தில் ரூ.210 விலைக்கு 150 கோடி கொரோனா மருந்து டோஸ்களை வாங்க முடியும். இதன்மூலம் 75 கோடி பேருக்கு 2 முறை தடுப்பூசி போட முடியும். பட்ஜெட்டில் கொரோனா தடுப்பு மருந்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கும் போது, தனியார் ஆஸ்பத்திரிகளில் பணம் கொடுத்து பொதுமக்கள் ஏன் தடுப்பூசி போட வேண்டும்?.
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அரசு பட்ஜெட் ஒதுக்கீடு மூலமாகவோ அல்லது காப்பீடு மூலமாகவே இலவசமாக பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதேபோல இந்தியாவிலும் பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும்.
தடுப்பு மருந்துக்கு பட்ஜெட்டில் பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ள போதும், இந்தியா அதிகளவில் கொரோனா தடுப்பு மருந்து சப்ளை செய்கிற போதும் மோடி அரசு பொது மக்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை பறிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.