சட்டசபை முதல்கட்ட தேர்தல்: மேற்கு வங்காளம், அசாமில் மனுதாக்கல் தொடங்கியது
சட்டசபை முதல்கட்ட தேர்தலில் போட்டியிட மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் வேட்பாளர்களின் மனுதாக்கல் தொடங்கியது.
மேற்குவங்காளம்
மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 294 இடங்களை கொண்டுள்ள அந்த சட்டசபையின் ஆயுள்காலம் மே மாதம் 30-ந் தேதி முடிகிறது.
இந்த மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். மம்தாவின் ஆட்சி ஆட்டம் கண்டு வருகிற நிலையில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
2011-ம் ஆண்டு முதல் ஆட்சி நடத்தி வருகிற மம்தா பானர்ஜி இந்த முறை வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக அங்கு ஆட்சி அமைப்பாரா? அல்லது அவரிடம் இருந்து ஆட்சியை பறித்து பா.ஜ.க. அரியணை ஏறுமா? என்ற மில்லியன் டாலர் கேள்வி இந்தியா முழுக்க எதிரொலிக்கிறது.
8 கட்ட தேர்தல்மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த தேர்தல் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 29-ந் தேதி முடிகிறது.
இதேபோல அசாம் மாநிலத்துக்கும் 27-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரையில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.
அசாமில் முதல்-மந்திரி சர்வானந்தா சோனாவால் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. 126 இடங்களை கொண்டுள்ள அந்த மாநில சட்டசபையின் ஆயுள் காலம் மே மாதம் 31-ந் தேதி முடிகிறது. இங்கு பா.ஜ.க., காங்கிரஸ், அசாம் கணபரிசத் கட்சிகள் இடையே முக்கிய போட்டி நிலவுகிறது.
மனுதாக்கல் தொடங்கியதுஇந்நிலையில் அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 2 மாநிலங்களிலும் முதல்கட்ட சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களின் மனுதாக்கல் தொடங்கியது.
அசாமில் ஏப்ரல் 1-ந் தேதி நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலுக்கு வருகிற 5-ந் தேதியும், ஏப்ரல் 6-ந் தேதி நடக்கும் 3-ம் கட்ட தேர்தலுக்கு வருகிற 12-ந் தேதியும் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
மேலும் மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 1-ந் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 6, 10, 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.