இளைஞர்கள் முதலில் கொரோனா தடுப்பூசி பெற வேண்டும்; மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தல்
இளைஞர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கியது. முதலில், சுகாதார பணியாளர்களுக்கும், பின்னர், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக, 60 வயதை கடந்த அனைவருக்கும், இணைநோய்களை கொண்ட 45 வயதை தாண்டியவர்களுக்கும் மார்ச் 1-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, மேற்கண்ட பிரிவினருக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
இந்த நிலையில், இளைஞர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசியை போட வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மல்லிகார்ஜூன் கார்கே வலியுறுத்தியுள்ளார்.
மல்லிகார்ஜூன் கார்கே கூறும் போது, “ எனக்கு 70-வயதுக்கு மேல் ஆகிறது. இளைஞர்கள் நீண்ட ஆயுள் பெறும் வகையில் அவர்களுக்குதான் கொரோனா தடுப்பூசியை முதலில் கொடுக்க வேண்டும்”என்றார்.