பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி. வசூல்: ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது - நிதியமைச்சகம் தகவல்
மாதந்தோறும் வசூலாகி வரும் ஜி.எஸ்.டி. மொத்த தொகையை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.;
புதுடெல்லி,
மாதந்தோறும் வசூலாகி வரும் ஜி.எஸ்.டி. மொத்த தொகையை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாத (பிப்ரவரி) ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில் தொடர்ந்து 5-வது மாதமாக ரூ.1 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலை கடந்த மாதமும் கடந்திருக்கிறது. அதாவது ரூ.1,13,143 கோடி கடந்த மாதம் வசூலாகி இருக்கிறது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.21,092 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.27,273 கோடியும் அடங்கும்.
பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.13 லட்சம் கோடி என்பது கடந்த ஆண்டு இதே மாதத்தில் கிடைத்ததை விட 7 சதவீதம் அதிகம் ஆகும். அதேநேரம் ஜி.எஸ்.டி.யில் சாதனை படைத்த கடந்த ஜனவரி மாதத்தை (ரூ.1,19,875 கோடி) ஒப்பிடுகையில் இது குறைவு ஆகும்.
இவ்வாறு ஜி.எஸ்.டி. வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம் கொரோனாவால் வீழ்ச்சியடைந்த இந்திய பொருளாதாரம் மீண்டு வருவது தெளிவாகிறது என நிதியமைச்சகம் கூறியுள்ளது.