சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடும் பணி நாளை தொடக்கம்
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நாளை கொரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ந்தேதியில் இருந்து தொடங்கி நடந்து வருகின்றன. இதன்படி முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசிகள் போடப்பட்டன.
இதுவரை நாட்டில் மொத்தம் 1 கோடியே 43 லட்சத்து ஓராயிரத்து 266 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் இணை வியாதிகளை உடைய 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை போடும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.
இதனை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நாளை கொரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. கொரோனாவுக்கான தடுப்பூசியில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு நீதிபதிகளுக்கு வழங்கப்படும் என முதலில் கூறப்பட்டது.
எனினும் மத்திய சுகாதார அமைச்சகம் பின்னர் வெளியிட்ட செய்தியில், இரு தடுப்பூசிகளில் ஒன்றை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு நீதிபதிகளுக்கு வழங்கப்படாது. கோவின் நடைமுறையின்படியே முழுவதும் முடிவு செய்யப்படும் என தெளிவுப்படுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பூசி போடும் பணிக்காக, சுப்ரீம் கோர்ட்டில் உள்ள அரசின் இடம் மற்றும் மத்திய அரசு சுகாதார திட்ட மையம் ஆகியவை பயன்படுத்தி கொள்ளப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதேபோன்று சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் தடுப்பூசிகள் நாளை போடப்படும்.