பிரதமர் மோடி கோவேக்சின் தடுப்பூசி போட்டு கொண்டது ஏன்? சர்ச்சையை கிளப்பிய ஓவைசி

ஜெர்மனி அரசு 64 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி பலன் தரவில்லை என கூறியுள்ளது என ஓவைசி புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார்.;

Update: 2021-03-01 12:05 GMT
புதுடெல்லி,

இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளை அவசரகால தேவைக்காக போட்டு கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.  இதன்படி கடந்த ஜனவரி மாதம் 16ந்தேதியில் இருந்து அதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

எனினும், தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு பாதிப்புகளை சந்திக்கின்றனர் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.  தடுப்பூசி போட்டு கொண்டபின்னர் உயிரிழப்பு ஏற்பட்ட தகவல்களும் வெளிவந்தன.  ஆனால், தடுப்பூசி போட்டு கொள்வதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அரசு பதிலளித்தது.

இதனால், கொரோனா தடுப்பூசியை முதலில் பிரதமர் மோடி போட்டு கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவந்தன.  இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியை இன்று போட்டு கொண்டார்.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியவுடன் முதல் நபராக பிரதமர் மோடி தடுப்பூசி போட்டு கொண்டார். அதனால் நாங்கள் பிரமருக்கு நன்றி கூறுகிறோம்.

அவர் கோவேக்சின் தடுப்பூசியை போட்டு கொண்டார் என மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தனும் அதனை இன்று உறுதி செய்துள்ளார்.  இந்நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, 64 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போதிய பலன் அளிக்கவில்லை.

கோவிஷீல்டு தடுப்பூசி 18 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்களுக்கானது என்று ஜெர்மனி அரசு கூறுகிறது.  இந்த குழப்பத்திற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தொடர்ந்து, பிரதமர் மோடி இன்று பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பூசியை போட்டு கொண்ட நிகழ்வும் அதனுடன் ஒத்து போவதுபோல் உள்ளது.  எனினும், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்